17. பைந்தமிழ்ச்சுடர் இராஜ் குமார் ஜெயபால்
52 அடி வெண்கலிப்பா
உலகிலேயே மீச்சிறந்த உணவான இட்டிலியும்
பலவகையில் சட்டினியும் சாம்பாரும் கலந்துண்டே
ஆவிவரும் சாதத்தில் அறுசுவைகள் சேர்குழம்பும்
தாவிவரும் நவரசமும் தயிற்றினையும் இனிப்போடுப்
பலகாரம் சுவைசேர்த்துப் பலகாலம் வாழ்விக்கும்
அலங்கார உணவுகளை அடுப்பிருந்து அகம்புகத்
தாவிவரச் சரியான தளமாகப் பிள்ளைக்குப்
பூவிதழில் பனிபோன்ற குன்றுகள்சூழ் குறிஞ்சியென
வண்டலூர், கிண்டியுடன் வனவிலங்கு பலவுறையும்
நன்மங்க லமெழும்பூர் நன்மைதரும் முல்லையென ...௰
மேற்கும் வடக்குதெற்கும் மேன்மைதரும் பசுமைகள்சூழ்
வேற்படையாய்க் கதிருகுக்கும் வேளாண்வாழ் மருதமென,
இந்தியாவில் அதிநீண்ட இயற்கைக் கடற்கரை
அந்தமின்றி உப்பளக்கும் மரினாவும் நெய்தலென
எந்நாளும் மூன்றாறும் இங்குவளைந் தோடினாலும்,
தண்ணீருக் கலைமக்கள் தவிக்கவைக்கும் பாலையென
வெள்ளையனின் உடுப்புபுறம் வேட்டிசட்டை லுங்கியகம்
கொள்ளையழ குச்சேலை கோடிகளில் கிடைக்குமே
பல்லிதழ்நெய் துணிகளும் பட்டுக்குக் காஞ்சியும்
சொல்லா அழகுடனே உடுத்தும் வகைகளும் …௨௰
நண்டோடும் கரைகளுடன் நரியோடும் வனங்களும்,
கொண்டாடும் பூச்சிகளும் கொத்துகொத்தாய்ப் புள்ளினங்கள்
வண்டாடும் சோலைகள் வௌவால்கள் ஊர்வனங்கள்
எண்ணாத நீருயிர்கள் இங்குகலப் பலர்பாரார்
நாயன்மார் ஆழ்வார் நயம்படத் தாமுணர்ந்து
ஆயத்த அறிவுக்கு அழகுடனே அவியிட்ட
மெய்வளர்க்கும் உணவளிக்கும் மெய்ஞானச் சித்திக்கு
பொய்யில்லா நீலகண்டன் கண்டுபாடல் பெற்றதலம்
ஊருள்ளும் சுற்றியும் ஒன்பதுடன் பதிமூன்றும்
காருண்ட வைணவத் திவ்யதேசம் ஏழுமுண்டே …௩௰
நவக்கிரகத் தலங்களுடன் நம்முன்னோர் வாழ்ந்துய்த்த
அவர்மதங்கள் பௌத்தமுடன் ஆசீவ கச்சமணம்
அண்மையிலே வந்தடைந்த கர்த்தரையும் நபிகளையும்,
இன்னபிற தத்துவங்கள் இன்முகத்தால் அரவணைத்துப்
பண்டைய சின்னங்கள் பலவிடத்தில் பார்க்கலாம்
அண்மை வரலாற்றில் அடிபதித்து கல்வெட்டால்
பல்லவரும் சோழரும் பாண்டியரும் பேசியிங்குச்
சொல்லிக் கொடுப்பதைப் பள்ளிகளும் பகராதே
அழகாகச் சொல்லிடும் மண்பாண்டம் தொன்மையினைப்
பழங்கற்கா லவாயுதங்கள் பலவுண்டே பார்த்தீரோ ...௪௰
விலங்கினங்கள் காணவாரீர் விருந்தளிக்கும் எங்களூரே
பலபடங்கள் காணவாரீர் படங்காட்டும் அரங்கங்கள்
நாடகமும் நல்லிசையும் நற்றமிழிற் கவிதைகளும்
பாடசாலை பலவுண்டு படித்தறியும் மாணவர்க்கே
நூலகங்கள் வழிகாட்ட நூல்நயமும் மெருகேற்ற
பாலகங்கள், உணவகங்கள், பல்வடிவில் பூங்காக்கள்
தொழிற்கூடம் பலவுண்டே தொலைதூரச் செலவுண்டே
எழில்கொஞ்சி அன்பூட்டும் இங்குளோர் நன்மக்கள்
நொந்தாரை அரவணைத்து நூற்றவீ என்றிணைத்து
வந்தாரை வரவேற்று வாழவைக்கும் சால்புடையச் …௫௰
சென்னையின் அன்னைமடி சேர்ந்திங்கு வாழ்ந்திருக்க
என்னதவம் செய்தோமோ யாம்!
No comments:
Post a Comment