'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


    9. பைந்தமிழ்ச் செம்மல் இரா.கண்ணன்

(சந்தக் கலி மண்டிலம்)

தமிழ் வாழ்த்து

அமிழ்தாம்தமிழ் அறிவாலதை அள்ளிப்பரு கெனவே
எமையும்வளர்த் தறமாய்க்கவி எழுதும்படி நெய்தாய்
உமைதாம்தொழு திருந்தேனெனை உணர்வோடெழ வைத்தாய்
திமிரோடெனைத் திகழும்படி திடமாயெழச் செய்தாய்

தலைமை வாழ்த்து

தமிழேஉயிர் மூச்சேயெனத் தனக்கேநிகர் தானாய்
இமியும்குறை இலவேயென இயங்கும்புகழ் வானாய்ச்
சுமையேயிலை சுகமேயெனச் சொல்லித்தரும் கோனாய்
அமைந்தார்நமக் கரணாய்நிதம் அவர்தான்வர தராசன்

இமைபோலவே பலரும்கவி எளிதாய்த்தமிழ் கற்க
அமைத்தார்முக நூலில்புகழ் அழகாயொரு சோலை
இமயம்தொடும் ஒருநாளினில் என்றும்செருக் கோடே
அமர்ந்தார்அவை நடுவேநமக் கருள்வார்தமி ழாலே

அவையடக்கம், வாழ்த்து

அவையில்நிறைந்(து) அறிவாலுறை ஆன்றோர்பெரு மக்கள்
சுவையேதமிழ்ச் சுவையாமெனச் சொக்கும்படி இங்கே
செவியின்வழி சிறப்பாய்நறுஞ் செழுந்தேன்தமிழ்ப் பருகக்
குவிந்தீர்தமிழ் குலமேயெனக் கூப்பிக்கைகள் தொழுதேன்

என்ன தவம் செய்தோம்

தவமாம்தமிழ் மகனேயெனத் தலையேநிமிர்ந் துலகில்
கவையாய்ப்படர்ந் தகிலாய்மனம் காற்றாய்த்திசை யெங்கும்
குவிந்தோம்தமிழ்க் குலமேயெனக் குவித்தோம்புகழ் ஓங்கப்
புவியின்முதல் இனமாம்தமிழ் புகழின்முடி நின்றே

கவிகள்பல நெய்தோம்நிதம் கணக்காய்ப்படி சேர்த்தோம்
இவைதாம்பணி எனவேநிதம் இருமாப்புடன் நின்றோம்
புவியில்தமிழ் பொலிவும்கெடப் புறமாய்க்கடை வழியே
கவினாய்மொழி பேசிப்பகை களைபோலுடன் வருதே

கலமேநிறை பாலில்துளி கலக்கும்கொடு நஞ்சாய்ப்
பொலிவாயுறும் தமிழில்மெலப் புகுத்திப்பிற மொழியைக்
கலந்தால்தமிழ் வளமாமென கதைப்பார்பல ரிங்குக்
குலமேஅழி வுறவேதுணை கோடாரியின் காம்பாய்

நலமேஇலாச் செயலால்நிதம் நரிபோலவே பல்லோர்
மலிவாயொரு மனத்தோடவர் மண்ணில்வலம் வருவார்
சிலைபோலவே இருந்தாலினி சிறப்பேயிலை எழுவோம்
அலைபோலவே அடித்தேநிதம் அன்னைத்தமிழ் காப்போம்

அறியார்தமிழ் அரசாளவே அன்னைத்தமிழ் தன்னை
அறியாமலே பயிலும்நிலை அழிவைத்தரும் கல்விப்
புறமாய்ப்பிற மொழியும்புக புதிதாயொரு கொள்கை
வருதேநம(து) அறிவின்வலி வரலாற்றினை அழிக்க

புயலின்குரல் புவியின்திரள் புலியின்பறழ் நாமே
வியப்பேஇலை விடியல்வரும் விளக்காயது கிழக்கே
இயக்கம்நமக் கினிதாம்தமிழ் எழுவோம்படைச் செருக்கே
இயல்பாய்மற முடலாம்நமக் கினிமீசையை முறுக்கு

அறவேயிலை அச்சம்நமக்(குஅறிவோம்பல களமே
மறவோமிதை மலர்வோம்முகம் மகிழ்வோடெழும் உளமே
திறமாம்தமிழ் திடமாம்தமிழ் திசையாம்தமிழ் வளமே
தருமாம்புகழ் வரமாய்நிதம் தமிழ்தான்நறுந் தவமே

No comments:

Post a Comment