'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


       18. கவிஞர் ஜோதிபாஸ் முனியப்பன்

தமிழ் வணக்கம்

முத்தமிழே தாயே மூத்தவளும் நீயே
    மூவுலகை யாளும் என்னுயிரும் நீயே
தித்திக்கும் தமிழே திகட்டாத தேனே
    தினந்தினமும் உன்னைச் சுவைத்திடுவேன் நானே
முத்தமிட்டே உனையும் உச்சிமுகர் வேனே
    முந்திவந்து தானே முழுமனதாய் நானே
சத்தமிட்டே உரைப்பேன் தாயேநீ வாழி
    சாதனைகள் படைக்கக் கரம்கொடுப்பாய் தோழி
தலைமை வணக்கம்

பைந்தமிழின் சோலைக்குப் பாவலராம்
     பாவெழுதும் கவிகளுக்குக் காவலராம்
செந்தமிழைப் பிழையின்றிக் காப்பவராம்
    செழுமையுடன் வழிநடத்திச் செல்பவராம்
வந்தாரை வரவேற்று மகிழ்பவராம்
     வளமான பாக்களையும் தருபவராம்
சந்தமோடு சிந்துக்கவி புனைபவராம்
     சத்தமின்றிச் சாதனைகள் படைப்பவராம்

என்னதவம் செய்தோம்

தமிழைத்தன் உயிர்மூச்சாய்க் கொண்டே நாளும்
    தரணியிலே வாழ்கின்றார் பலபேர் நம்மில்
அமிழ்தம்போல் செந்தமிழைப் போற்று கின்றார்
    அகிலமாளும் தமிழ்த்தாயை வணங்கு என்றே
உமிழ்நீராய்ச் சுரக்கின்றாள் சிலரின் நாவில்
    உத்தமராய் வாழ்கின்ற உயர்ந்தோர் தன்னில்
அமிலம்போல் அழிக்கின்றார் தமிழைச் சில்லோர்
    அறிவில்லா மாந்தர்போல் நடக்கின் றாரே

என்னதவம் செய்தோமிம் மண்ணில் தானே
    எதுவுமறி யாமூடர் களிடை யேநாம்
இன்னல்கள் செய்கின்றார் இயன்ற தைத்தான்
    இமைப்பொழுதும் அயராமல் உடனி ருந்தே
இன்பமாகப் பேசிடுவார் இனிப்பைப் போலே
    ஏற்றிவிட்டுத் தள்ளிடுவார் நமையும் கீழே
துன்பமதைத் தந்திடுவார் துணிந்தே நின்று
    தூரமாக இருந்தாலும் துணையில் லாமல்

தான்சொல்லும் பாட்டொன்றே தமிழ்தான் என்னும்
    தருக்கிரிடை வாழ்வாளா? தமிழத் தாய்தான்
வீண்சொல்லை விளைப்பாரை வியந்து போற்றி
    விலகாமல் காப்பாளா? தமிழத் தாயும்
நூன்வரைந்த இலக்கணத்தைப் புறத்தி லிட்டு
    நுழைபுலத்தான் என்பாரைப் புரத்தல் செய்யத்
தேன்சொட்டும் தமிழென்ன தீயோர் போற்றும்
    தேமாங்காய் புளிமாங்காய் என்றா சொல்வீர்
அறநூலோர் தொகுத்தவற்றை அழகாய் ஏந்தி
    அளிக்கின்ற நல்லாரைக் கழுவி லேற்றி
மறநாடன் என்பார்கள் வாழு கின்ற
    மாநிலத்தில் வருவதற்கா தவங்கள் செய்தோம்
பறவைகள் பறக்கின்ற வானம் போலே
    பரிசுத்த வான்போன்றோர் வாழும் நாட்டில்
பிறக்கத்தான் பெருந்தவமும் யாமும் செய்தோம்
     பிணிபோன்ற பிழையாளர் நோகு மாறே

No comments:

Post a Comment