பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி
வங்கக் கடல்வளைந்து வாரி அலையடித்துப்
பொங்கும் புதுவையெனும் பொற்புடைய நாட்டினிலே
எட்டு வயதில் எடுத்த சுதந்திரப்போர்
கொட்டுசத்தம் கேட்டுக் குழுமிய வீரத்தும்
கனியும் காயும்எனக் கலந்திருந்த செந்தமிழில்
கனிதான் வேண்டும் காய்வேண்டா எனக்கருதித்
தனித்தமிழ் முழக்கம் தளரா வகைசெய்து
இனித்த தமிழ்ப்பாக்கள் இயற்றிய நிறைமைத்தும்
புதுநூல் பலயாத்துப் பழநூல் அறிந்துய்துப்
பொதுநூல் எனவாய்த்த முகநூல் வழிவந்து 10
முதுமை இளமையென முறைமை வகைமையென
மதுரத் தமிழ்க்கவிகள் வழங்கிய தகைமைத்தும்
ஆசான் வரதராசன் அன்பின் மழைநனைந்து
பேசா நிறைவுப் பெருமூச்சுக் காலத்தும்
சோலைப் பாவலர்க்குச் சொல்லிடுங்கள் என்றுரைத்த
சாலப் பரந்த மகிழ்வான நெஞ்சத்தும்
எம்நினைவை அகலாத எங்கள்பொன் பசுபதியார்
தம்நினைவாய் இவ்வரங்கம் தம்கடனாய் நாட்டுகிறோம்
செம்மைத் தமிழ்வாழ்க சேர்சுற்றம் நாம்வாழ்க
எம்மான் அருள்மடியில் என்றும் அவர்வாழ்க 20
No comments:
Post a Comment