1. பாவலர் கருமலைத் தமிழாழன்
தமிழ்வணக்கம்
என்தாயின் குருதிவழி என்னுள் வந்தே 
    என்குருதி தனில்கலந்து நின்ற வள்நீ
என்தாயின் தாலாட்டுப் பாட்டில் வந்தே 
    என்செவியின் உள்நுழைந்து ஒலிப்ப வள்நீ 
என்தாய்தான் கைப்பிடித்தே அம்மா வென்றே 
    என்கையால் எழுதிவைக்க நிலைத்த வள்நீ 
என்தாய்க்கும் தாய்வழியே வந்த தமிழே 
    என்றுமென்றன் நெஞ்சத்தின் துடிப்பே நீதான்     
வணங்குகின்றேன்
என்ன தவம் செய்தோம்
கண்ணகியைத் தெய்வமென வணங்கும் கையால் 
    கற்பழித்துப் பெண்கள்தம் கழுத்த றுப்பர் 
பெண்மையினைத் தெய்வமெனப் போற்றும் வாயால் 
    பெருந்தொகையைத் தட்சணையாய் மணக்கக் கேட்பர்
சாதியில்லை எனமேடை முழக்கி விட்டு 
    சாதிமாறிக் காதலிக்கும் மகளை அடிப்பர் 
வீதிநின்று பொதுமைபேசி மறைவாய்ச் சென்று 
    விளைவிப்பர் மதங்களிடைக் கலவ ரத்தை!
நீதிநெறி மன்றத்தில் முழங்கி விட்டு 
    நிதிவாங்கி நீதியினை முடமாய்ச் செய்வர் 
ஏதிலியாய்ப் பெற்றவளை விடுதி சேர்த்து 
    எழிலாக மனைவியுடன் இல்லம் வாழ்வர்!
வளம்தருவோம் எனவணங்கி வாக்கைப் பெற்று 
    வளம்சுருட்டி வெளிநாட்டில் மறைத்து வைப்பர் 
களவுதனைத் தடுக்கின்ற காவல் காரர் 
    கள்வரொடு கரம்கோர்த்து சட்டம் விற்பர்! 
கடவுள்தம் பெயர்சொல்லி ஆன்மீ கத்தைக் 
    காமத்தின் கூடாரம் ஆக்கிக் கொல்வர் 
அட!நெஞ்சு பொறுக்காஇச் செயல்கள் கண்டும் 
   ஆர்த்தெதிர்க்க மக்களிங்கே துணிவும் இல்லார்!
என்ன தவம் செய்தோம் நாம் இங்கு வாழ்வதற்கே?
காதலிக்க மறுத்தாலோ அமிலத் தாலே
    கருக்குகின்றீர் புகழ்ந்திட்ட மதிம கத்தை
காதலித்தோன் வேறுசாதி என்ற போது
    கண்முன்னே வெட்டுகின்றீர் துடிது டிக்க !
வாதங்கள் புரிந்துண்மை எடுத்து ரைத்தால்
    வார்த்தைகளில் அவதூறு பரப்பு கின்றீர்
மீதமென்ன கண்களிலே உடைகி ழித்து
    மிருகமென மின்னுடலை நக்கு கின்றீர் !
சிறுகுழந்தை என்றபோதும் பெண்ணென் றாலோ
   சிறுநீரின் துவாரத்தைக் கிழிக்கின் றீர்கள்
எறும்புடலில் ஊர்வதுபோல் கைக ளாலே
   எடுத்தணைத்துத் தடவுகின்றீர் மார்பி டத்தை !
உறுப்புக்கள் என்னநீங்கள் தின்ப தற்கா
   உடலினிலே இயற்கையன்னை படைத்த ளித்தாள்
அறுவடைக்கு முற்றாத நெல்லென் றாலும்
    அறுக்கின்றீர் அடுத்தவீட்டு விளைச்ச ளென்றே !
பொருள்களினை விற்பதற்கும் காட்சி யாக்கிப்
    பொழுதெல்லாம் எம்முடலைக் காட்டு கின்றீர்
விருப்பந்தான் இருந்தாலும் இலையென் றாலும்
    விளக்கணைத்தால் உடன்படுக்கப் பணிக்கின் றீர்கள்!
வருவாயை மதுவிற்குக் கொடுத்து விட்டு
    வளைகரத்தை ஒடித்தெட்டி உதைக்கின் றீர்கள்
நெருப்பாக எழுமுன்னே திருத்தம் கொள்வீர்
    நேர்நின்றே எதிர்த்திட்டால் இருக்க மாட்டீர்!
எனப் பெண்களெல்லாம் எழுந்துவிட்டால் 
என்னதவம் ஆண்களெல்லாம் செய்திருந்தாலும் சாம்பல் ஆவார்
No comments:
Post a Comment