'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


     5.  பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
   எழில்கொஞ்சும் திருநாட்டில் இப்பிறப்(பு) எடுத்தோம்!
பொன்னான பல்வளங்கள் நிறைந்தெங்கும் மிளிரப்
   பூமித்தா யின்கொடையாய் இயற்கைவரம் பெற்றோம்!
அன்பொன்றே சிவமென்ற சித்தர்வாக்(கு) உணர்ந்தோம்
   அன்னைதந்தை முதற்கடவுள் என்றுபணியக் கற்றோம்!
பன்மொழிகள் இப்புவியில் பவனிவந்த போதும்
   பைந்தமிழே முதன்மையென்று மார்தட்டி நின்றோம்!

பழங்காலக் கோயில்கள் கலைநயத்தைக் காட்டப்
   பண்பாட்டில் சிறந்திருந்த பெருமையை மதித்தோம்!
அழிவில்லா இலக்கியங்கள் தமிழ்மொழியில் தோன்றி
   அறநெறியை எடுத்தியம்ப நல்வழியறிந்தோம்!
வழுவில்லா இறையுணர்வால் பக்திநெறி யோங்க
   வளமையான பனுவல்கள் வரமாகப் பெற்றோம்!
எழுச்சியுறச் செய்தபல கவிகளின் படைப்பை
   எல்லையில்லா மகிழ்வுடனே இதயத்தில் பதித்தோம்!

எத்தனையோ இருந்தாலும் நிறைவென்னுள் இல்லை
   இன்றமிழில் எழுதுவதே இன்பமென்று ணர்ந்தேன்!
தித்திக்கச் சொல்லடுக்கிக் கவிவனைந்த போதும்
   சிறிதேனும் அதிலுள்ளம் அமைதிகொள்ள வில்லை!
சத்தான மரபினிலே நாட்டமிகக் கொண்டு
   தணியாத தாகத்தில் முதலடியெடுத்தேன்!
முத்தாக மணியாகச் சுடர்விட்ட குழுவை
   முகநூலில் இனங்கண்டு மகிழ்விலுளம் பூத்தேன்!

மரபுகற்றுக் கொடுக்கும்பைந் தமிழ்ச்சோலை வாசம்
   மனத்தையள்ள பாவலரின் சோலையிலி ணைந்தேன் !
வரமென்றே தான்கருதிப் பயிற்சியில்பங் கேற்று
   மாவரத ராசனிடம் பாட்டியற்றக் கற்றேன் !
அரும்பாக்கள் சோலையிலே பூத்துமணம் வீச
   அழகழகாய்ப் பலவகையில் மரபில்சமைத்தேன் !
தருவாகப் பயன்கருதாத் தமிழ்த்தொண்டு செய்யும்
   தமிழ்மகனைக் கண்டதுமென் தவப்பயனால் தானோ?

என்போன்றே பலருக்கும் தன்னார்வத் தோடே
   எளிமையாகக் கற்பிக்கும் பாவலரின் சேவை
முன்பைப்போல் எஞ்ஞான்றும் அன்புள்ளத் தோடு
   முழுவதுமாய் வற்றாமல் முகநூலில் தேவை!
கன்றுகளின் பசியறிந்து பால்புகட்டும் தாயாய்க்
   கனித்தமிழை நமக்கூட்டும் நல்லாசான் கிட்ட
என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
   இத்தருணம் நன்றிசொல்வோம் கையிரண்டைக் குவித்தே

No comments:

Post a Comment