3. பைந்தமிழ்ச் செம்மல் மன்னை வெங்கடேசன்
தமிழ் வாழ்த்து
என்னதவம் செய்தோம் எனுமோர் தலைப்பினில்
இன்னமுதச் செந்தமிழில் யாக்கவந்தேன் - வண்ணமுறப்
பாக்களெலாம் வந்துவிழப் பைந்தமிழே நீயிங்குக்
காக்க வருவாய் களித்து
அவை வணக்கம்
சோலைத் தளந்தன்னில் சொக்குமால் பாவெல்லாம்
மாலை யெனயாக்கும் மாக்கவி பல்லோர்சூழ்
மேலை அவையோரே மென்றமிழ்ப் புலவோரே
தாளை வணங்கிநின்று தந்தனன் நல்வணக்கம்
தலைமை வணக்கம்
பாவகை அறியாப் பாமரர் போன்றோர்க்கும்
ஆவலோ டந்தமிழ் அருமையாய்க் கற்பித்து
எவ்வகைப் பாவும் இயற்றுமால் இச்சேவை
செவ்வனே செய்யும் சீர்மிகு பாவல
உன்னைப் பணிந்தேன் உவகை கொண்டே
என்னை அழைத்தீர் இயம்பினன் வணக்கமே!
என்ன தவம் செய்தோம்
பள்ளி நாளில் இலக்கணத்தைப்
படித்து மறந்து நின்றோர்க்குத்
தெள்ளு தமிழில் பாவகைகள்
தேர்ந்த வகையில் கற்பிக்கும்
நல்ல சோலைத் தளமிதனில்
நாங்கள் வந்து சேர்ந்ததனால்
எல்லை யில்லாக் களிபடைத்தோம்
என்ன தவம்யாம் செய்தோமோ 1
யான்செய் தோமோ பாவகைகள்
அனைத்தும் வரத னருளன்றோ
தீஞ்சு வையில் நீர்மகிழ்ந்தால்
சீரெல் லாம்பா வலருக்கே
தாஞ்சு வைத்த தமிழ்விருந்தை
தரணி சுவைக்க வைத்தாரே
ஏய்ந்த பெருமை யாம்பெற்றோம்
என்ன தவம்யாம் செய்தோமோ 2
ஓது வித்தார் பாவகைகள்
உயர்ந்த தமிழில் பாவலரும்
யாதும் பயனை எதிர்பாரா(து)
அடியோர்க் கிங்குப் பயில்வித்தார்
ஏது மறியா திருந்தோமே
எளிதாய்க் கற்றுத் தேர்ந்தோமே
ஈதே எங்கள் தமிழ்ச்சோலை
என்ன தவம்யாம் செய்தோமோ 3
செய்ய தமிழில் பாப்பலவும்
சீரோ டியற்றும் திறன்பெற்றோம்
வைய மிதனில் சான்றோர்முன்
மகிழு மாறு நாம்நின்றோம்
ஐயா வரத ராசரெனும்
ஆசி ரியரால் இந்தவுயர்(வு)
எய்தப் பெற்றோம் மாநிலத்தில்
என்ன தவம்யாம் செய்தோமோ 4
என்ன தவத்தைச் செய்தோமோ
இந்தச் சோலை யாம்புகுந்தோம்
வண்ணத் தமிழின் பாவகைகள்
வளமாய்க் கற்று நாம்தேர்ந்தோம்
எண்ண மெல்லாம் ஏட்டினிலே
இனிய கவியாய் நாம்தருவோம்
இன்ன வகையில் எமையுயர்த்தி
இனிது செய்தீர் பாவலரே 5
நன்றியுரை
சோலைத் தளத்தின் சீருரைக்கத்
துணிந்து வந்தேன் இவ்வரங்கில்
ஆலைக் கரும்பாய் இனித்ததென்றால்
அனைத்தும் பாவ லரவருக்கே
மேலைச் சோலைத் தளமிதனில்
மேன்மை யுள்ள பாவலரால்
ஆளென் றானேன் ஆதலினால்
அடியேன் நன்றி உரைத்தேனே
No comments:
Post a Comment