'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

வணிகத் தமிழ் – அவசரமும் அவசியமும்


பா. ஞான பிரகாசம், தணிக்கையாளர்

உலகின் முதன்மொழியாம் தமிழ்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்ட தமிழ்கூறும் நல்லுலகிற்கு, நீங்கள் சிறுபான்மையினராய் ஆகித் தமிழ்மொழியின் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாங்கள் ஓர் அறைகூவல் விடுக்கிறோம். 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று கூறும் தமிழனே! எங்கே இருக்கிறது உன் தமிழ்? உங்கள் தமிழ் நவீன அறிவியல் யுகத்துடனும், வணிக யுகத்துடனும் இணைந்திருக்கிறதா? மேலும் அதிலே இணைந்து உலக அளவில் பேசப்பட்டு வளர்ச்சி யடைந்திருக்கிறதா? என்று சிந்தித்து பாருங்கள். நம் தமிழ்மொழி அறிவியல் துறையிலாவது சற்று எட்டிப் பார்த்திருக்கிறது. ஆனால் நாம் செய்யும் வணிகத்தில் இருக்கிறதா? அது இல்லை என்பதுதான் பதில். நம் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தமிழன் நடத்தும் தொழில்நிறுவனங் களிலும், அலுவலகங்களிலும் தமிழ்மொழி முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகிறதா? இல்லையே. உண்மையாகத் தமிழ்மொழிமீது தமிழனுக்கு அக்கறை இருக்குமேயானால் அவன் தமிழைத்தான் தன் வாணிப மொழியாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது? கடந்த 50 ஆண்டுகளாகத் திரையுலக வழிவந்த கலைஞர்களால் (கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா) ஆட்சி நடத்தப்பட்ட தமிழகத்தில், ஆட்சியாளர்களால் இயல், இசை, நாடகத் தமிழைத் தங்கள் கவிதை, கதை, வசனம், நடிப்பு மற்றும் பேச்சுகள் மூலம்தான் வளர்க்க முயன்றார்கள். தமிழிலேயே கவிதை, கதை, கட்டுரை எழுதிவிட்டால் தமிழ்மொழி நவீன யுகத்திற்கேற்ப வளர்ந்துவிடுமா? அவர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) உண்மையிலேயே தொலைநோக்குப் பார்வை இருந்திருந்தால் அவர்கள் தமிழை அறிவியல் துறையிலும், வாணிபத் துறையிலும் அல்லவா புகுத்தி வளர்த்திருக்க வேண்டும். தற்போதைய யதார்த்த நிலை என்ன? தமிழர்கள் எல்லாம் ஆங்கிலம் கற்றால்தான் பொது அறிவு கிடைக்கும், வேலை கிடைக்கும் (அல்லது) தொழில் நடத்த முடியும் என்று நம்புகிறார்கள். இத்தகு கேவலமான நிலைக்கு அரசாங்கமும் தனியார் தொழிற் துறையும்கூட ஆதரவாகத்தான் இருக்கிறது.

இதற்கு யார் காரணம்? மக்கள் மட்டுமல்லர். தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் தான். மக்களைக் குறைசொல்லிப் பயன் இல்லை. அரசு எந்த மொழியை ஆதரிக்கிறதோ அதைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். ஒருமுறை, தமிழறிஞர் திரு.தமிழண்ணல் அவர்கள் தன்னுடைய 'தினமணி' நாளிதழ்க் கட்டுரையில் கூறியதுபோல், 'எந்த மொழி சோறு போடுமோ அந்த மொழிதான் தொடர்ந்து நவீன யுகத்தில் நிலைத்து நிற்கும். மற்றவை எல்லாம் பேச்சுவழக்கற்று 'சமஸ்கிருதம்' போன்று காலப்போக்கில் வழக்கற்று அழிந்து போகும்' என்று கூறினார். நம் தாய்மொழியான தமிழ்மொழி நமக்குச் சோறு போடுமா (வருமானத்தை ஈட்டித் தருமா)? என்பதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. ஆனால் நாம் தமிழ்மொழி சோறு போடாது, நம் வாழ்க்கைக்கு வருமானத்தை ஈட்டித் தராது (அல்லது) வாழ்வு தராது என்று நம்பி நம் குழந்தைகளை மழலைப் பள்ளியிலிருந்து உயர்கல்விவரை தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்காமல், ஆங்கிலவழிக்கல்வி கற்க அனுமதித்துத் தமிழையே ஒழுங்காகப் பேச, எழுத வராத (ஆங்கிலத்தையும் சேர்த்துத்தான்) எந்த மொழியிலும் ஒழுங்காகத் தேர்ச்சிபெறாத உணர்வற்ற தமிழர்களை உருவாக்கி வருகிறோம்.

இன்னும் எத்தனை நாளைக்குத் தமிழர்களைத் தங்கள் தமிழ் எழுத்து, பேச்சுத் திறமை மூலம் இந்த அரசியல்வாதிகள் ஏமாற்றப் போகிறார்கள்? திரைக்கலைஞர்களை நீக்கிவிட்டு அறிஞர்கள் ஆட்சி செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒரு பிரச்சினையின் 'மூலவேரைக்' கண்டறிய வேண்டுமானால் நிர்வாகத்தில் ஒரு வழிமுறை யாக 'ஏன் ஏன் என்று' (Why Why Analysis Theory) கேள்விகேட்டு வரும் விடைகளுக்குள் திரும்பத் திரும்ப 5 முறை கேட்டுபார்த்தால் கடைசியாகச் சரியான விடை (அல்லது) தீர்வு கிடைக்கும் எனச் சொல்வார்கள். இதன்படி தமிழன் தமிழ்மொழி மூலம் கற்காமல் ஏன் ஆங்கில வழியில் கற்கிறான்? என்று 5 முறை உங்களுக்குள் வரும் விடைகளுக்குள் வைத்துக் கேட்டுக்கொண்டே வந்தீர்களானால் தமிழ்மொழிக்கான தேவை நிறுவனங்கள் செய்யும் வணிகத்தில் இல்லை என்பதால்தான் நம் தமிழ்மொழி நவீன யுகத்துக் கேற்ப வளரவில்லை எனத் தெளிவாகப் புரிவதுடன் தேவைக்கும் அளிப்புக்குமான (Demand & Supply) கோட்பாட்டைப் புரிந்துகொள்வீர்கள்.

இங்கே ஆங்கில மொழிக்கான தேவைதான் (Demand) வணிகத்தில் இருக்கிறது. தமிழுக்கு இல்லை. எங்கே தேவை இருக்கிறதோ அதற்குத்தான் அளிப்பு (Supply) வந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொழிற்துறையில் (போதாக்குறைக்கு உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மூலம் பன்னாட்டு நிறுவனங் களின் படையெடுப்பு வேறு!) ஆங்கிலம் முழுக்க முழுக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் தமிழுக்கான தேவை எங்கிருக்கும்? எனவே தமிழ்மொழி மூச்சுத் திணறி எழுத்து, பேச்சு வழக்கற்றுப் போகாமல் இருக்கவும, சுயமாகச் சிந்திக்கும் திறனைப் பெறவும் மொழிப் பிரச்சினையைக் கீழிருந்து மேலாகப் (Bottom to Top Approach) பார்க்காமல், மேலிருந்து கீழாகப் (Top to Bottom Approach) பார்க்க வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ்வழிக்கல்வி கொடுத்து அளிப்பை (Supply) உருவாக்கும் முன்பு தமிழ்வழி தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்கான தேவையை (Demand) முதலில் உருவாக்க வேண்டும். ஒரு இடத்தில் 'தேவை' ஏற்பட்டுவிட்டால் 'அளிப்பு' தானாகவே எங்கிருந்தாலும் (மேட்டிலிருந்து பள்ளத்திற்குத் தானாக நீர் பாய்வதைப் போல) வந்து சேர்ந்துவிடும். இதனால் தமிழ்மொழிவழிக் கல்விக்கான தேவை தானாகவே உருவாகிவிடும்.

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களிலும், வியாபாரத்திலும் அதன் நடைமுறைகளிலும் உடனடியாகத் தமிழை வற்புறுத்த அமல்படுத்தி (வரிச்சலுகை தந்து) தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். இதற்காகத் தமிழக அரசை வலியுறுத்தி எல்லாத் தமிழ் இயக்கங்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவன முதலாளியும் மற்றும் அதன் நிர்வாகமும் தமிழைத் தன் அலுவல் மொழியாகத் (Official Language) தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு, தமிழை ஒவ்வொரு நிறுவனத்தின் முக்கியத் துறைகளான 'கணக்கியல் மற்றும் நிதி' (Accounting & Finance), 'உற்பத்தி அல்லது சேவை' (Production or Service), 'விற்பனை' (Sales & Marketing),  'மனித வளம்' (Human Resource) மற்றும் 'செயலகம் மற்றும் சட்டம்' (Secretarial & Legal) ஆகிய துறைகளில் அமல்படுத்தித் தமிழுக்கான தேவையை, ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்தித் தமிழ்வழி மூலம் மட்டுமே நிறுவனத்தை நடத்தி வருமானத்தை ஈட்ட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்படிச் செய்தால் மட்டுமே ஒவ்வொரு வணிகச் செயல்களிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு அதனைச் செயற்படுத்தத் தேவையான தமிழ்வழிக் கல்வியை நாம் அனைத்துப் படிப்புகளிலும் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டு அதனை முழுமையாக நிறைவேற்ற முடியும்.

இதனைப் புதிய தொழிற்கொள்கையாக - மொழிக் கொள்கையாகத் தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்துவதுடன் தொழிலகக் கூட்டமைப்புகளையும், இனி, புதிதாகக் களத்தில் இறங்கும் தொழில்முனைவோர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதே நமக்கு முன் உள்ள சவால் நிறைந்த பணியாகும். இதனை ஆரம்பக் கட்டத்தில் செய்யத் தமிழ்ப்பேராசிரியர்களின் (அல்லது) அறிஞர்களின் உதவியைத் தனியார் நிறுவனங்களும் அரசும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். ஆரம்பக் காலங்களில் இது மிகவும் கஷ்டமாகவும், முடியாத காரியமாகவும் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இது பழகிவிடுவதால் தமிழறிஞர்களின் உதவி யில்லாமல் சாதாரண தமிழறிவு உள்ள தமிழனே செய்துவிடுவான்.

மேலும் முக்கியமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள [Articles 344(1) and 351] 22 மொழிகளையும் தேசியமயமாக்க நாம் மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். குறைந்தபட்ச நடைமுறையாக ஒவ்வொரு மாநிலத்தில் வழக்கிலுள்ள பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழிகளைப் பாராளுமன்றத்தின் தீர்மானம் மூலம் 8-வது அட்டவணையில் திருத்தம் கொண்டுவந்து இதைச் செய்திட வேண்டும். இதன் பலன் எப்படி இருக்க வேண்டுமானால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் அவரவர் வியாபார எல்லைகள் மற்றும் தொடர்புக்கு ஏற்ப அவரவர் தாய்மொழியிலேயோ (அல்லது) இந்தி (அல்லது) ஆங்கிலம் தத்தமது வணிகத்தில் (அல்லது) வியாபாரத்தில் பயன்படுத்துவதோடு அலலாமல் ஆண்டுதோறும் வருமானவரிக் கணக்கு மற்றும் செயலகப் பணிகளை அவரவர் விருப்பப்பட்ட மொழியில் தாக்கல் செய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்கவேண்டும்.

சுருங்கச் சொன்னால் ஒரு நிறுவனம் அரசாங்கத்துடன் செய்துகொள்ளும் பரிவர்த் தனைகள் மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் முழுக்க முழுக்க அவரவர் விருப்பட்ட மொழிகளில் அதாவது மத்திய அரசானால் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும், மாநில அரசானால் தமிழ் மூலம் மட்டுமே தாக்கல் செய்யவதாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை ஒரு நிறுவனம் தனது வாணிபத்தைச் சர்வதேச அளவில் செய்துவந்தால் அதன் அலுவல் மொழியாக (அனைத்துத் தகவல்களிலும்) தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் இருக்க வேண்டும். எனவே ஒரு நிறுவனம் பயன்படுத்தும் அலுவல் (அல்லது) வணிக மொழியானது அது எந்த எல்லைக்குட்பட்டுத் தன் வியபாரத்தைச் செய்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அமைய வேண்டும். இதையே வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு நிறுவனத்தின் அலுவல் மொழியானது (Official Language) உற்பத்தி செய்யும் பொருள்கள் (அல்லது) செய்யும் சேவைகள் தொடர்பான தகவல்கள் மாநில அளவில் மட்டுமேயானால் அவை தமிழிலும், அதன் வியாபாரம் இந்திய அளவில் இருந்தால் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டையும் ஒருசேரப் பயன்டுத்த வேண்டும். அதுவே நிறுவனம் சர்வதேச அளவில் வியாபாரம் செய்து வந்தால் அலுவல் மொழியாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் ஒருசேர அமல்படுத்த முன்வர வேண்டும்.

இது எப்படிச் சாத்தியப்படும் எனக் கேட்பவர்களுக்குச் சீனப் பொருட்களையோ, ஜெர்மன் மற்றும் ஜப்பானியப் பொருட்களையோ வாங்கிப் பாருங்கள். அப்பொருள்களில் அவரவர் தாய்மொழியுடன் ஆங்கிலத்திலும் தகவல்கள், விளக்கக் குறிப்புகளிலும், கையேடுகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆக, அவர்களால் அதைத் திறம்படச் செய்யும்போது நம்மாலும் மனமிருந்தால், (மனமிருந்தால் மார்க்கம் உண்டு) நம் தமிழ்மொழி மறைந்தொழியாமல் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். எங்கே அடித்தால் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தி நம் தமிழ்மொழியின் ஆதிக்கத்தைக் கொண்டுவர முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இது ஒன்றுதான் தமிழை 'இனி, தமிழ் மெல்லச் சாகாமல் தடுக்கும்' ஒரு ஆராய்ந்தறிந்த தீர்வாக இருக்க முடியும். இது கடினமான வழியாக முதலில் தோன்றலாம். ஆனால் எந்த ஒரு விஷயமும் கொஞ்சம் காலம் பழகிவிட்டால் பின்னர் நடைமறைக்கு எளிதாக வந்துவிடும். எனவே நாம் 'தாய்மொழிவழிக் கல்விக்கு' முன்னுரிமை கொடுப்பதைவிடத் 'தாய்மொழிவழி வணிகத்திற்கும் அறிவியலுக்கும்' முன்னுரிமை கொடுத்து அதைச் செயல்படுத்திட வாருங்கள் என்று அழைக்கிறோம்.

தமிழுக்கான தேவையைத் தமிழ்நாட்டில் உருவாக்காமல் நாம் தாய்மொழி (தமிழ்) வழிக்குக் குரல் கொடுப்பதாலோ, தூய தமிழில் எழுத, பேச வற்புறுத்துவதாலோ தமிழிலேயே வணிகக் கடைகளுக்குப் பெயர்ப்பலகை வைக்க வற்புறுத்துவதாலோ, தமிழிலேயே பெயர்வைக்கும் திரைப்படங்களில் 'கேளிக்கை வரிச்சலுகை' கொடுப்பதாலோ, தமிழ்த்தாய்க்குச் சிலை வைப்பதாலோ, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழறிஞர்களுக்குப் பொற்கிழி தந்து பாராட்டிவிடுவதாலோ தமிழைச் செத்துவிடாமல் பாதுகாத்து வளர்க்க முடியாது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து தெளிய வேண்டும். இவையெல்லாம் தமிழுக்கு மிகப் பரவலான அளவில் தேவையை வணிகத்திலும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் உருவாக்கி விட்டுப் பின்பு செய்ய வேண்டியவையாகும். மற்றவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வேலையே அன்றி வேறென்ன சொல்வது. நம் தமிழ்நாட்டு அரசாங்கமே தமிழை அலுவல் மொழியாக அரசு அலுவலகங்களில் அமல்படுத்தி நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும்போது ஏன் நம் தனியார் நிறுவனங்களால் நடத்த முடியாது?

தமிழ்வழிச் சமச்சீர்க்கல்விக்குக் குரல் கொடுக்கின்ற நாம் அதே வேளையில் வணிக நிறுவனங்களை (அல்லது) வியாபாரத்தைத் தமிழ்வழியில் செயல்படுத்த / ஏற்படுத்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து மத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் திருத்தம் செய்து, மொழிக்கொள்கைக்கெனத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்வழியில் செயல்படும் வியாபார/தொழில், சேவை நிறுவனங்களுக்கு (அது எந்த வகையான வியாபாரம் மற்றும் சேவை நிறுவனமாக இருந்தாலும்) வரிவிலக்குச் சலுகைகள் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ்மொழிக்கான தேவையைத் தமிழ்நாட்டில் நாம் உருவாக்கிவிட்டால் புலிக்கு (இந்திக்கு) பயந்து சிங்கத்திடம் (ஆங்கிலத்திடம்) மாட்டிக் கொண்டு அடிமைப்பட்டு அல்லல்பட்டு மெல்ல மெல்லச் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் மொழியை அப்போதுதான் காப்பாற்ற முடியும்.

அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையில் சிறிது மாற்றம்செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தைச் சர்வதேச வாணிபத்திலும், தமிழ் மற்றும் இந்தியை (இந்தியாவில் பெரும்பான்மையாகப் பேசும் மொழியாக இருப்பதால், மற்றபடி வேறு காரணமில்லை) இந்திய அளவில் நடைபெறும் வாணிபத்திலும் பயன்படுத்தித் தமிழைச் சோறுபோடும் மொழியாக நாம் மாற்ற முன்வர வேண்டும். ஒவ்வொரு தமிழனும் இனியாவது விழித்துக் கொண்டு தங்கள் தாய்மொழியாம் தேன்தமிழைத் தங்கள் வேலைகளிலும், தொழில்களிலும் மற்றும் அனைத்துவகைத் தகவல் தொடர்புச் சாதனங்களிலும் (அலைபேசி, இணையம் உட்பட) பயன்படுத்த முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒவ்வொரு தமிழனும் (தமிழ் பேசத் தெரிந்த எவரும் கூட) தங்கள் தாய்மொழியான தமிழ்மொழியில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். ஏனென்றால் உலகம் கணினியில் அடங்கிவிட்ட பிறகு தமிழ்மொழியில் தட்டச்சு செய்யத் தெரிந்துவிட்டால் நாம் நம் தமிழ்மொழியை மின்னஞ்சலிலும், மற்றும் இணையத்திலும் கணிப்பொறித் தட்டச்சு மூலம் எளிதாகப் பயன்படுத்தத் தொடங்கிவிடலாம். இல்லையென்றால் ஏற்கெனவே 'தமிங்கிலிஷ்' (ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசி வருவது) பேசி வரும் தமிழர்கள் முழுக்க முழுக்க வருங்காலத்தில் ஆங்கிலேயேர்களாக்கப்படுவார்கள் என்பதையும், 'தமிழ் பேசு, தங்கக் காசு அள்ளு' என்ற மானக் கேடான போட்டி நடத்தும் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்துவரும் வேலையை எதிர்காலத்தில் நம் தமிழக அரசே செய்ய வேண்டி வரும் என்று எச்சரிக்கின்றோம். இன்றைக்கு தமிழ்மொழி பேசுபவர்கள், பயன்படுத்துபவர்கள் உலகளவில் அதிகமாக (சுமார் 10 கோடிக்கு மேல்) இருப்பதால்தான் 'Discovery, National Geographic Channel' போன்ற வெளிநாட்டுத் தொலைக் காட்சிகளும், 'Facebook, Wikipedia' போன்ற இணையத் தகவல்தொடர்புகளும் தமிழ் மொழியில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் நாம் இங்கே தமிழர்களை ஆங்கில வழிக் கல்வி கொடுத்து ஆங்கிலேயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதற்குச் சமீபத்திய உதாரணமாகத் தமிழக அரசு சுமார் 3000 அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வியை ஆங்கிலவழியில் சொல்லிக் கொடுக்கத் துவங்கியிருக்கிறது என்ற செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் இருக்கிறது. இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றாக ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டும்.

தாய்மொழியில் ஒரு குழந்தை சிறுவயது முதல் கல்வி (குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வியாவது) கற்றால்தான் சுயசிந்தனையுடனும், சிறந்த பலவகை ஆற்றலுடனும் திறனுடனும் விளங்க முடியும் என்பதைப் பல உலக மொழியியல் அறிஞர்கள் மற்றும் மனவியலறிஞர்கள் அறிவியல் பூர்வமாக நிருபித்தும் கூறியும் வருகின்றனர். இதனைப் பொதுமக்களும், அரசும் உணர்ந்து உடனே நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். நோயுற்று மரணத்தின் வாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தமிழன்னையை அணிகலன்களால் (இலக்கிய தொண்டாற்றி) அழகுபடுத்தவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைத்துவிட்டு அவளின் நோயை நீக்க முன்வருமாறு தமிழக அரசையும், தமிழ் மக்களையும் அழைக்கின்றோம். தமிழாட்சியை வணிகத்துறையிலும், அறிவியல் மற்றும் நீதித்துறையிலும் அமல்படுத்தி 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற நிலையை ஏற்படுத்துமாறு நம் மண்ணின் மைந்தர்களை அழைக்கின்றோம்.

உலகமயமாக்கல், தராளமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் அம்சமாக விலைவாசி ஏற்றம் மட்டும் தமிழனின் கழுத்தை நெறிக்கவில்லை, அவன் பேசும் தமிழையும் நெறித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து தனது நீண்ட உறக்கத்திலிருந்து (மௌனத்திலிருந்து) விழித்தெழுந்து நம் தமிழ்மொழி அழிந்துவிடாமல் தொடர்ந்து வெற்றிநடைபோடத் 'தோள்கொடு தோழா' என்றழைக்கிறோம். ஆங்கிலவழிக் கல்விக்கு எதிராகப் போராட்டம் நடத்த முன்வருமாறும், தமிழ்வழியில் தொழில் மற்றும் சேவை நிறுவனங்களை ஏற்படுத்த முன்வருமாறும் உண்மையான தமிழ் ஆர்வலர்களையும், மண்ணின் மைந்தர்களையும் தமிழ்மொழி கொண்ட தாய்ப்பாசத்தால் 'காந்திய மக்கள் இயக்கம்' சார்பாகத் தங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

என் தாயைவிட அதிகமாக நேசிக்கும் என் தாய்மொழியாம் தமிழ்மொழி சுவாசத்துடன்,
                                                          பா.ஞான பிரகாசம்,
            தணிக்கையாளர்,
                                               திருநின்றவூர், சென்னை

No comments:

Post a Comment