பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர. விவேகானந்தன்
பைந்தமிழ்ச்
சோலை முகநூல் குழுவின் நான்காம் ஆண்டு விழாவில் வாசிக்கப்பட்ட, பைந்தமிழ்ச்
சோலையின் நோக்கம், கடந்துவந்த பாதை மற்றும் பணிகள் குறித்த ஆண்டறிக்கை:
முகநூல்
வரலாற்றில் 23-08-2015 ஒரு பொன்னாள் ஆகும். ஆம்... மரபு கவிதை
பரப்புதல், தமிழின்
யாப்புச் சிறப்புகளைத் தெரிவித்தல், இலக்கண இலக்கியங்களை விரித்துரைத்தல் போன்ற
பணிகளைத் தலையாய நோக்கமாகக் கொண்டு 23-08-2015-ஆம் நாள் “பைந்தமிழ்ச்சோலை” ஒரு முகநூற்
குழுவாகத் தொடங்கப்பட்டது. பொழுதுபோக்கு, வணிகம் முதலிய வெவ்வேறு பயன்பாடுகளில் இயங்கிவரும் முகநூலில்,
மரபு கவிதைகளை எழுதப் பயிற்றுவிக்கும் தளமாக ஒரு குழுவை உருவாக்கிய
பெருமை மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களைச் சேரும்.
முகநூல்
வரலாற்றில் நூற்றுக் கணக்கான தெளிந்த மரபு
பாவலர்களை உருவாக்கிய யாப்பு மரமாகக் கிளைவிரித்துப் பரவி நிற்கிறது நம்
பைந்தமிழ்ச்சோலை. பலரும் வியக்கக்கூடிய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும், பயிற்சிபெறும்
கவிஞர்களையும் பெரும் புலவர்களையும் உள்ளடக்கியது பைந்தமிழ்ச்சோலையின் தனிச்சிறப்பாகும்.
ஒவ்வொரு
திங்கட்கிழமையன்றும் பாட்டியற்றுக என்னும்
பயிற்சி வெளியாகி, வெள்ளிக்கிழமைக்குள் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் திருத்தப்பட்டுச்
செம்மையாக்கப்பட்டுத் தொகுப்பாக வெளியிடப்படும். இப்பயிற்சியில் நால்வகைப் பாக்கள்,
பாவினங்கள், சிந்துப் பாடல்கள் என ஒவ்வோர்
ஆண்டும் சுமார் 50 பாவகைகள் கற்பிக்கப்பட்டு, ஆண்டு
இறுதியில் அடிப்படைப் புணர்ச்சி விதிகள், யாப்பியல் பாக்கள் தொடர்பான வினாத்தாள்
ஆக்கப்பட்டுப் பட்டத்தேர்வு நடத்தப்படுகிறது. இவ் வினாத்தாளைப் பார்த்தவர்கள்
வியந்து, பாராட்டாமல் இருப்பதில்லை.
ஏறக்குறைய ஒரு பல்கலைக்கழகம் தயாரிக்கக்கூடிய ஒரு வினாத் தாளைவிடச் சிறப்பான
வினாத்தாளாக அஃது அமைந்திருக்கும்.
இந்தப்
பட்டத் தேர்வில் 40 முதல் 69 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் ‘தேர்ச்சி’
என்ற நிலையையும், 70 முதல் 80 வரை
மதிப்பெண்கள் பெற்றவர்கள் ‘முதல்வகுப்பில் தேர்ச்சி’ என்ற நிலையையும், 80 முதல் 89 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள்
‘உயர்சிறப்புத் தேர்ச்சி’ என்ற நிலையையும், 90 முதல் 100 வரை
மதிப்பெண்கள் பெற்றவர்கள் ‘உயர்தனிச் சிறப்புத் தேர்ச்சி’ என்ற நிலையையும் பெற்று
அதன்வழியாகப் பைந்தமிழ்ச் சுடர், பைந்தமிழ்ப் பாமணி, பைந்தமிழ்ச்
செம்மல் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இத்தகைய
சிறப்புடைய பைந்தமிழ்ச் சோலையின் முதலாம் ஆண்டு விழா, சென்னை வாசுகி கண்ணப்பர்
மகாலில், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டமளிப்பு எனப் பல்வேறு அமர்வுகளாக
அமைக்கப்பட்டுச் சிறப்புற நடைபெற்றது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயர்த்தி
பாவலர் மணிமேகலை குப்புசாமி அவர்கள் கலந்துகொண்டு பாவலர்களுக்குப் பட்டங்கள்
வழங்கிச் சிறப்பித்தார். தொல்காப்பியப் புலவர் வெற்றியழகனார் தொல்காப்பியம்
குறித்துச் சிறப்புரை ஆற்றினார். பைந்தமிழ்ச் சோலையின் மாணவர்களால் ஆசான்
மா.வரதராசனாருக்குப் பைந்தமிழரசு எனும் விருது வழங்கப்பட்டது.
இரண்டாம்
ஆண்டு விழா சிதம்பரத்தில் பைந்தமிழ்ச் சுடர் கவிஞர் நடராசன் பால சுப்பிரமணியன், கவிஞர்
சு.மோகன் அவர்களின் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது. புலவர்
பெருஞ்சித்திரனாரின் மருகன் அருளியார் மற்றும் அவர்களின் மகள் தேன்மொழி அம்மையார்
கலந்துகொண்டு பாவலர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில், ஒரு புதுமையான நிகழ்வாக, முதன்முதலாக ஆசுகவி அரங்கம்
அருளியார் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பாவலர்கள் மன்னை
வெங்கடேசன், விவேக்பாரதி, வள்ளிமுத்து, சியாமளா ராசசேகர், அர.விவேகானந்தன்
ஆகியோர் ஆசுகவிப் பட்டம் பெற்றனர்.
மூன்றாம்
ஆண்டு விழா திருப்பூரில் பைந்தமிழ்ச் செம்மல் கட்டிக்குளம் சுந்தரமூர்த்தி அவர்களின்
முன்னெடுப்பில் நடைபெற்றது. தமிழ்த்திரு மாது அவர்கள் கலந்துகொண்டு
பாவலர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் புதுமையாக, இசையோடு கூடிய சிந்துப் பாட்டரங்கம்
நடைபெற்றது. ஆசுகவிப் போட்டியில் கலந்துகொண்டு பாவலர்கள் கவினப்பன், சாமிசுரேசு, ஏகாபுரம்
வெங்கடேசு ஆகியோர் ஆசுகவிப் பட்டம் பெற்றனர். பாவலர் மா.வரதராசனாருக்கு அவருடைய மாணவர்களால் யாப்புச்சீர் பரவுவார்
எனும் விருது வழங்கப்பட்டது.
நான்காம்
ஆண்டில் (2018-2019), பல மாற்றங்களைப்
புகுத்தி அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது பைந்தமிழ்ச் சோலை.
பாட்டியற்றுக, சிந்து
பாடுக ஆகிய பயிற்சிகளுடன் பைந்தமிழ்ச் செம்மல்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய சந்தம்
பாடுக, வண்ணம்
பாடுக, முயன்று
பார்க்கலாம் ஆகிய புதிய பயிற்சிகள் தொடங்கப்பட்டன.
விடுகதை, ஈற்றடிக்குப்
பாட்டெழுதுதல், அந்தாதி எழுதுதல், ஆசுகவிச் சுழல்போட்டி எனச் சிறப்பான பணிகளைப்
பைந்தமிழ்ச் சோலை முன்னெடுத்துச் சென்றது. ஆசுகவிச்சுழல் போட்டியில் வெற்றி
பெற்றோருக்கு ‘விரைகவிவாணர்’ எனும் பட்டமும், தலைமையேற்று நடத்தியோருக்கு ‘விரைகவி
வேந்தர்’ எனும் பட்டமும் வழங்கப்பட்டது.
பைந்தமிழ்ச்செம்மல்
மன்னை வெங்கடேசன் அவர்களுக்குப் பைந்தமிழ்ச்சோலையை வழி நடத்தும் இணையாசிரியர்
பொறுப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பாவலர்கள் மன்னை வெங்கடேசன், சியாமளா
ராசசேகர், பரமநாதன்
கணேசு, நிர்மலா
சிவராசசிங்கம், அர. விவேகானந்தன், வள்ளிமுத்து, தமிழகழ்வன், விவேக் பாரதி ஆகிய எண்மரைக் கொண்ட எண்பேராயம்
என்னும் அமைப்பு ஏற்படுத்தப் பட்டது.
பைந்தமிழ்ச்
சோலையின் சார்பாகத் ‘தமிழ்க்குதிர்’ என்னும் மின்னிதழ் தொடங்கப்பட்டது. இம்
மின்னிதழ் மரபுகவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், பைந்தமிழ்ச் சோலையின் செயல்பாடுகள் எனப்
பல பயனுள்ள தகவல்களைத் தாங்கித் திங்கள்தோறும் வெளி வருகிறது.
முகநூல்
குழுமமாகத் தொடங்கப்பட்ட பைந்தமிழ்ச் சோலை ஓர் இலக்கியப் பேரவையாகச் சென்னையைத்
தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. திங்கள்தோறும் இலக்கியக் கூடல்
நடைபெற்று, மரபு தமிழைப் பரப்புவதை
நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றும் சான்றோர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வோர்
இலக்கியக்கூடலிலும் பைந்தமிழ்க் குவை, பைந்தமிழ்க் குருத்து ஆகிய விருதுகள் வழங்கிச்
சிறப்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து குவைத், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கிளை இலக்கியப்
பேரவைகள் தொடங்கப்பட்டுத் திங்கள்தோறும் இலக்கியக் கூடல் சிறப்பாக நடைபெற்று
வருகிறது.
முத்தாய்ப்பாக, மரபு
மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களிடம் மரபு பாடல்களைக் கற்றுத் தேர்ந்த கவிஞர்களை
உள்ளடக்கி உருவான பரம்பரையை ஆவணப்படுத்தும் விதமாகப் 'பாவலர்
பரம்பரைக் கவிஞர்கள்' எனும் தொகுப்பு நூல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது.
இதுவரை
பைந்தமிழ்ச் சோலையில் பயின்று பாவலர் பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றுப்
பைந்தமிழ்ச் சுடர் பட்டம் பெற்றோர் 33 கவிஞர்கள், பைந்தமிழ்ப் பாமணி பட்டம் பெற்றோர் 29
கவிஞர்கள், பைந்தமிழ்ச்
செம்மல் பட்டம் பெற்றோர் 19 கவிஞர்கள், ஆசுகவிப் பட்டம் பெற்றோர் 11
கவிஞர்கள், சந்தக்கவிமணிப்
பட்டம் பெற்றோர் 8 கவிஞர்கள்.
இவ்வாறு
பைந்தமிழ்ச்சோலை தமிழுக்கு அரும்பணியாற்றி
வருகிறது.
நல்லோரின்
கருத்துகள் நாளும் பைந்தமிழ்ச் சோலையில் ஏற்றுக்கொள்ளப்படும். பொல்லாரின்
கருத்துகள் பைந்தமிழ்த்தாயின் காலடியில் பொசுங்கிக் கிடக்கும்.
சான்றோர்களே!
பண்புள்ளோரைச் சோலையில் இணைத்து விடுங்கள். மரபு தமிழின் மணத்தை மண்ணுலகில் பரவச்
செய்யுங்கள்.
கெடலெங்கே
தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வோம். நன்றி!
No comments:
Post a Comment