'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


    13. பைந்தமிழ்ப்பாமணி நெடுவை இரவீந்திரன்

அவை வணக்கம்

பண்ணில் அவையாளும் பாவலரே மாகவியே
    பாட்டில் சுவையாளும் வரதராச மாமணியே
விண்ணில் செவிசூழுஞ் சீர்மிகு சபையோரே
    வீட்டில் கவிகேட்டுக் களைப்பாறும் அணியோரே
மண்ணில் கைக்குவித்துத் தலைசாய்த்து வணங்குகிறேன்
    வானில் குரலொலிக்கக் கவிதையினை வாசிக்கிறேன்
தண்ணில் விருந்தளிக்கும் தமிழாளும் என்கவியைச்
    சாறாய் அருந்தியதும் நல்வாழ்த்தை வழங்குவீரே!

மண்மொழிகள் எத்தனையோ மலர்ந்திருக்கக் கண்டோம்
    மணக்குமிந்தத் தமிழ்போலும் மற்றமொழி உண்டோ
பொன்மொழியாம் பூந்தமிழில் மரபுகவி உண்டாம்
    பொழுதெல்லாம் அவளிசையைக் காதினிக்க உண்டோம்
எண்டிசையும் தமிழ்மொழியே புகழ்மணக்கக் கண்டோம்
    ஏழுலகும் தமிழிசையில் மெய்மறக்கக் கண்டோம்
வண்ணமகள் செந்தமிழைச் செவியினிக்கப் பாட
    வாழ்வதனில் என்னதவம் நாமுஞ்செய் தோமோ

பொறுப்பான புலவரெல்லாம் பாமாலை தைத்தார்
    பொதுவான இலக்கணத்தைப் பொதுநூலில் வைத்தார்
வெறுப்பான மாந்தர்களோ வேதாந்தம் பேசி
    வேரறுத்துத் தொலைத்திடவும் பூமியில்நி னைத்தார்.
கறையில்லா வண்டமிழோ காலூன்றி நின்று
    காலத்தில் அழியாத கதிரவன்போல் கண்டோம்
மறையாத காப்பியங்கள் மாமேடை ஏறி
    வளமோங்க என்னதவம் நாமுஞ்செய் தோமோ

முப்பத்தி யோரெழுத்தே மூலவெழுத் தாகும்
    முருகனவன் தந்துசென்ற மோகமொழி யாகும்
கப்பலேறிக் கடல்கடந்து வாழுமொழி யாகும்
    காமனவனும் தீண்டாத கன்னிமோழி யாகும்
வெப்பமேறி உருகிடாத வேதமொழி யாகும்
    வேந்தரெல்லாம் போற்றிவந்த வீரமொழி யாகும்
தெப்பமேறி உலாவரும் தெய்வமொழி பேசத்
    தீந்தமிழே என்னதவம் நாமுஞ்செய் தோமோ

வறுமையிலும் கடன்வாங்கா வளமைமொழி யாகும்
    வட்டியில்லாக் கூர்சீராய் வந்துவரி யேறும்
பொறுமையிலே மென்தமிழாய்ப் பூமியைப்போல் ஆறும்
    போட்டியிலே வன்தமிழாய்ப் போக்கிரியாய் மாறும்
திறமையிலே விவேகமாய்ச் சீர்களிலும் கூடும்
    சிறகெடுத்து மயிலன்ன கவிதையிலே ஆடும்
அறமோங்க அகிலத்தை யாளுகிற தேவி
    அடியொற்றி வாழவென்ன தவம்நாம்செய் தோமோ

நன்றி நவிலல்

மரபென்னும் இச்சபையில் மாசிலாவென் பாட்டை
    வரம்புடனும் அமைதியாய் வாசிக்கக் கேட்டீர்
குரல்பின்னப் பாடியதைக் கூரறிவால் கேட்டுக்
    கூடத்தில் கலகலப்பாய் வாயினிக்கப் பேசிக்
கரந்தன்னால் களிப்பவரைக் காதினிக்க வைத்தீர்
கரம்பின்னி நன்றியினைக் காட்டுகின்றேன் நானே
    காலமறிந்து எம்பாட்டைக் கவித்துவிட்டேன் வாழீ!

No comments:

Post a Comment