'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


19.    கவிஞர் அம்பிகா குமரன்

தமிழ் வணக்கம்

அற்றைப் புலவர் அரும்பாதை நான்நடக்க
இற்றை நடப்பில் இசைக்கின்றேன் - ஒற்றைவான்
வேணி அலங்கார வெண்ணிலவாஞ் செந்தமிழை
வாணி அளிப்பாயோ வந்து.

அவையடக்கம்

சோலை மணத்தைச் சுமந்துவருந் தென்றல்போல்
பாலை நிகர்த்த பனித்தமிழால் - காலைவான்
பொங்குங் கதிராய்ப் பொழியும் கவிதைமுன்
கங்காமென் பாட்டின் கவின்.

தலைமை வாழ்த்து

வரமென வந்த ஆசான்
   வரதனாம் உன்னைப் போற்றி
கரமதைக் காலாய் ஏற்றுக்
   கனித்தமிழ் சாற்று கின்றேன்.

என்ன தவம் செய்தேன்

நாவினில் உண்மை அன்றி
    நல்லதைச் செப்பா திங்கே
கோவிலில் தெய்வம் அன்றிக்
    கொள்ளையை வைக்கா திங்கே
தூவிடும் வானம் அன்றித்
    துளிர்தலும் ஆகா திங்கே
பாவிகள் வாழும் வையம்
    பாவமென் தவமோ ஈது

கோளுடை எண்ணம் எல்லாம்
    கொண்டதோ ஏமாற் றந்தான்
நாளுமே நடக்கும் காலில்
    நன்மையோ வெறும்நாட் டம்தான்
வாளுடைப் போரில் கூட
     வருகிற எதிரி எல்லாம்
ஆளொரு திசைகள் போக
     அறிவிலும் ஏமாற் றம்தான்

அவன்என வாழ வேண்டும்
    அகிலமே போற்ற வேண்டும்
இவன்என வாழ வேண்டும்
     இதழ்களோ சிரிக்க வேண்டும்
எவன்எவன் வாழ்ந்தான் இங்கே
     இம்மையில் சொர்க்கம் கண்டான்
அவன்அவன் திசையில் மேவ
    அழகிய கதிரைக் கண்டான்

நாண்தவஞ் செய்தால் சீறும்
    நற்கணை வெற்றி தாரும்
வான்தவஞ் செய்யப் பூக்கள்
   வாசமோ கூந்தல் சேரும்
தூண்தவத் தாலும் கூட
    துணிந்துமே நிற்கும் வீடு
நான்தவம் செய்தால் என்ன
    நட்டமா வந்து சேரும்

No comments:

Post a Comment