11. பைந்தமிழ்ப்பாமணி மதுரா
தமிழ் வாழ்த்து
உயிராகி மெய்யாகி உயிர்மெய் யாகி
உணர்வாகக் கலந்துவிட்ட தமிழே வாழி
பயனாகிப் படிப்போர்க்குப் பண்பை ஊட்டும்
பாங்கான மொழியான தமிழே வாழி
அயராமல் உழைப்போர்க்கும் அல்லல் நீக்கும்
அருஞ்சுவையை அளித்திடும்நல் மொழியே வாழி
பெயர்நாடாப் புகழ்தேடாப் புலவர் கட்கும்
பெரும்பேற்றைத் தருமெங்கள் தாயே வாழி
தலைமை வாழ்த்து
பாமலரும் சோலைதனைப் படைத்த வள்ளல்
பழமரமாம் கனிகொடுத்து ஈயும் செம்மல்
நாமகளின் ஈன்றெடுக்காச் செல்லப் பிள்ளை
நன்றவரின் பொறுமைக்கோர் எல்லை யில்லை
தாமறிந்த பாவகைகள் பயிற்று வித்த
தன்னலமே இல்லாத எங்கள் ஆசான்
மாமணியாய் வீற்றிருக்கும் தலைமை வாழ்க!
மரபினிக்கச் சிரந்தாழ்த்தி வணங்கு கின்றேன்
என்ன தவம் செய்தோம்
நதிகளையும் சுரண்டியிங்கு மணலை யள்ளி
நல்லவற்றை மறுத்துத்த லைவைத்தார் கொள்ளி
மதியிழந்து மரங்களையும் வீணாய் வெட்டி
மழையின்றி வாடுதையா பட்டித் தொட்டி
விதைப்பதற்கு வயல்வெளிகள் இங்கே இல்லை
வீடுகட்ட மனைகளாக்கிப் பிரித்தார் எல்லை
கதியற்றுப் போனதிந்தத் தேசந் தானே
கண்டுணர என்னதவம் செய்தோம் நாமே!!
இயன்றதெலாம் சுருட்டியதை வளமாய் ஆக்கி
இயற்கைதந்த செல்வத்தை இழிவாய்ப் போக்கித்
தயக்கமின்றி மாண்புடைத்துப் பெண்ணைத் தூற்றி
தரமிறக்கிச் சந்தையினில் பொருளாய் மாற்றி
மயக்குகிறார் போதையினைத் தினமும் ஊட்டி
மறுக்கவில்லை நெஞ்சத்தின் துணிவு காட்டி
இயல்புதனை இழந்துவிட்ட மாக்கள் போலே
இருந்திடவே என்னதவம் செய்தோம் நாமே
தடியெடுத்த மாந்தரெல்லாம் தண்டல் காரர்
தம்மைத்தா மேதினமும் போற்றிக் கொள்வார்
இடித்துரைக்கத் திராணியின்றி நிற்கும் நல்லோர்
இழிசெயலைப் பார்த்துவெம்பிக் குமைந்து கொள்வார்
மடியினிலே கனமில்லை என்ற போதும்
மனந்துணிந்து கேட்பதற்கும் அஞ்சும் வீரம்
விடியலைத்தான் காணோமே இருளே எங்கும்
வெட்கிநிற்க என்னதவம் செய்தோம் நாமே!!
அறமறந்த அரசியலின் அவலம் கண்டு
அழுகிறதே உள்ளங்கள் துயரங் கொண்டு
மறத்தினையும் மறந்துவிட்ட கல்வி யின்று
மறுகித்தான் போகிறதே தரமும் கொன்று
திறனற்ற தீயோரின் கையில் நாடு
தீய்கிறதே பாழ்பட்டு நாளுங் கேடு
பிறழ்வுகளே நிறைந்திருக்கு மிந்த மண்ணில்
பிறப்பெடுக்க என்னதவம் செய்தோம் நாமே!!
No comments:
Post a Comment