2. பாவலர் அ குமாரசாமி
பாவேந்தர் பாரதிதாசனைப்
பற்றி
தமிழாக நாம்பெற்ற சந்தனச் சோலையில்
சந்தங்கள் தேடித்தந்தான்
தவமகன் பாரதி தாசன்ஒரு குயிலாகித்
தமிழிசை பாடிவந்தான்
தமிழோடு விளையாடித் தாயாக உறவாடித்
தன்னுயிர் தாங்கிநின்றான்
தடைபல உடைத்துமே தடங்களைப் பதித்தவன்
தரணியில் ஓங்கிநின்றான்
அமிழ்தான தமிழினை அரங்கிலே ஏந்தியே
ஆதவன் ஆகிநின்றான்
அறிவார்ந்த சொல்லழகும் ஆளுமைப் பொருளழகும்
அடக்கியே பாவைத்தந்தான்
உமிழ்ந்திடும் அயல்மொழி ஊறுகள் தமிழிலே
ஒட்டாமல் நீக்கிவைத்தான்
உறுபொருள் கருப்பொருள் உண்டாக்கித் தமிழொளி
விளக்கினை ஏற்றிவைத்தான்
பெரியாரின் பாரதியின் பெருமைதரும் காந்தியின்
பேரடியைப் போற்றிநின்றான்
பிற்போக்குத் தனமான பெண்களின் அடிமையைப்
பிணியான கூற்றமென்றான்
வெறியர்கள் பெண்களின் விதவையின் கோலத்தை
விலங்காக்கித் தாழ்த்திவைத்தார்
விடிவெள்ளி யல்லவோ விதவைகள் வேர்ப்பலா
என்றுமே வாழ்த்திவைத்தார்
உரிமைக்குப் போராடி உழைப்பவர் உயர்ந்திட
உயர்வான சிந்தைகொண்டான்
உண்மையைப் பகுத்தறியும் உன்னதக் கவிஞனாய்
உலகிலே முந்திநின்றான்
எரிமலை குமுறினால் இழப்புதான் புவியிலே
எங்குமே பார்த்ததுண்டாம்
இக்கவிக் குமுறலால் இருளற்ற வெளிச்சமே
எங்குமே தோன்றக்கண்டோம்
புரட்சியால் கவியிலே புதுமைகள் இயைந்துமே
பொன்னாரம் கட்டிவைத்தான்
புழுவான மக்களின் புரட்சியின் பாடலால்
புடமாக்கித் தட்டிவைத்தான்
இரவான மதம்சாதி இடிந்திட வில்லையெனில்
இனமானம் நாணும்என்றான்
எம்சுய மரியாதை இல்லையேல் இங்குயிர்
இருப்பதே ஈனம்என்றான்
தரங்கெட்டுப் போனதே தமிழரின் நிலையென்று
தாய்மொழி காக்கவந்தான்
தமிழ்மாசு நீக்கிடத் தானொரு மீனாகித்
தமிழ்க்கடல் நீந்திவந்தான்
உறவாக நாட்டுக்கே உயிரோட்டப் பாதையில்
ஓர்பாலம் கட்டிவைத்தான்
உரமான கவிதையால் ஒப்பற்ற கவிஞனாய்
உலகெலாம் எட்டவைத்தான்
கேடற்ற தமிழனைக் கிளர்ந்தெழ வைத்தவன்
கிழக்கிலே உதயமானான்
கெடுப்பவர் வீழவே கீழானோர் சதிகளைக்
கிழித்துமே புதைக்கலானான்
வீடற்ற நிலையிலே வீழ்ந்திட வைத்தோரை
வீதியில் புறங்கட்டினான்
விடுதலைப் பெரும்பேற்றின் விடியலைப் பெற்றிட
வீரத்தை நிலைநாட்டினான்
பாடற்றுப் போன நம் பைந்தமிழ் இயக்கத்தைப்
பாட்டாலே படியேற்றினான்
பாமரன் வீட்டிலும் பைந்தமிழ் இசைத்திட
பண்பாலே கொடியேற்றினான்
ஈடற்ற தமிழனாய் இதயத்துள் முதல்வனாய்
எழிலான திசைகாட்டினான்
இனங்காத்த பெருமகன் இவனைநாம் பெறவேமண்
என்னதவம் செய்ததோ?
தமிழன் இதயங்கள் நிறைவானதோ?
No comments:
Post a Comment