'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


    6. பைந்தமிழ்ச் செம்மல் வள்ளி முத்து

கத்தும் கடல்குளித்தேன் காதலிலே முகம்தொலைத்தேன்
பத்தும் பதினொன்றும் பாட்டென்றே நானினைத்து
நித்தம் எதையெதையோ நேற்றுவரைக் கிறுக்கிவைத்தேன்.!
பித்தம் தலைக்கேறிப் பெருமைபல பேசிநின்றேன்..!

எதுகை மோனையென எதுவும் தெரிந்தறியேன்
பொதுவாய் எழுதியதைப் புதுமைக் கவியென்றேன்..!
மதுவை மலர்தேடி வண்டு புகுதலைப்போல்
முதுமை ஒளிபெற்றேன் முகநூல் சோலைதனில்..!

புரதம் உடல்வளர்க்கும் பொதுவாய் யாவருக்கும்
வரதன் அப்படித்தான் வாய்த்தார் எம்மவர்க்கும்
விரதப் பசியோடு வீற்றி ருந்தெனக்கு
வரமாய்த் தமிழமுதை வார்த்துப் புகட்டினின்றார்..!

பெண்பாவை பாடித்தான் பெருமைபல பேசிநின்றேன்
புண்பாவாய் இலக்கணத்தில் கொலைத்தொழிலே புரிந்துவைத்தேன்..!
நாண்பாவா என்றழைத்து...! நன்பாவின் இலக்கணமும்
வெண்பாவும் போதித்துப்..! பொன்பாசெய ஊக்குவித்தார்..!

தளைதட்டும் போதெல்லாம் தலைகோதிப் பிழைதிருத்தும்
கலையெங்குக் கற்றாரோ காஅதல் வரதராசன்
மலைத்ததுண்டு பலநாளும் மனத்திலெண்ணிக் களித்ததுண்டு
அலைத்துகளாய் அங்கேயே அலைந்தலைந்து கிடத்ததுண்டு...!

பிழைப்புக்காய்த் தமிழ்படித்தேன்..! பெயரின்பின் தமிழாசான்
தலைக்கனத்தை உடைத்தெறிந்தேன் தண்டமிழின் சோலையாலே..!
மலைக்கவைக்கும் தமிழ்க்கடலின் மட்டற்ற பெருமைகண்டேன்
வலைத்தளத்தில் ..!நானெல்லாம் வரதர்முன் தூசன்றோ..!

சீரிய இலக்கணமும் செந்தமிழின் பாவினமும்
நேரிய முறையிலவர் நெறிப்படுத்தும் காரணத்தால்
ஊரெலாம் மரபுகவி உச்சரிக்கக் காண்கின்றேன்
யாரெவன் என்சொலினும் இஃதன்றோ உண்மையின்று...!

இன்னறும் தீந்தமிழை இலக்கியத் தேன்தமிழைப்
பொன்மலர்ப் பூந்தமிழைப் பொலிந்தெழும் பைந்தமிழைக்
கண்ணுறக் கண்டுகேட்டுக் காதுற உவகைகொள
என்தவம் செய்தேனோ இச்சோலை புகுதற்கே..!

No comments:

Post a Comment