'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


    10. பைந்தமிழ்ப் பாமணி சுந்தர ராசன்

வெள்ளாடை பூண்டானை எங்கும் நிறைந்தானை
வெள்ளிநிலா வண்ணனை நாற்கரனை - அள்ளும்
அழகு முகத்தானை அல்லல் அழிப்பானைப்
பழகுதமிழ்க் கேட்டேன் பணிந்து!

இலக்கியத் தணிகள் பூண்டே
   இலக்கணத் தாடை போர்த்தி
மலைத்திடும் இளமை கொண்ட
   மயக்கிடும் நங்காய் நின்னை
நிலைத்திட நெஞ்சில் வைத்தே
   நிமிர்கிறேன் நாவில் நின்றே
கலைத்திறம் யாவும் ஈவாய்
   கன்னியே தமிழே வாழ்க!

கத்துமொரு ஆனை கதறலுக்குச் செவிசாய்த்த
அத்திவர தனவன் அமுதசரஸ் ஏளிவிட்டான்!
தத்தித் தவழ்ந்தபடித் தமிழ்படிக்க வந்தயெமை
தொட்டுத்தோள் தூக்கிவைத்த தூயவரே வரதராச!
நித்தமும்உம் ஆறினிலே நீளும் தமிழ்ப்புகழே!
வித்தகரே அட்டவங்கம் வீழப் பணிந்தேனே!
கத்துகிறேன் ஏதோ கவிதையென ஏற்றருள்க!
குற்றங் குறைநீக்கி குணம்மட்டும் கொள்வீரே!

என்ன தவம் செய்தோம்இப்புவியில் நாம்பிறக்க!

நீரிரண்டு பங்கும் நிலமொன்றும் என்றாக
ஈர்ப்பு விசைகொண்டே எந்நொடியும் சோராமல்
சீர்சுற்றில் தான்சுற்றிச் சேர்ந்துகதிர் சுற்றி
ஊர்வனவ முதலாக உயிரினங்கள் பலதாங்கிக்
கூர்மதியால் மானுடந்தான் கூட்டும் நலத்திலெல்லாம்
தீர்ந்துவிடா இயற்கை திருகோடி உள்வைத்துப்
பார்வாழும் அனைவரையும் பாங்காகத் தாங்கியுருள்
தேர்நமது பூமியிலே திமிரோடு நடமாட

என்னதவம் செய்துவிட்டோம்எவரேனும் சொல்லுங்கள்!

என்னதவம் செய்தோம்? இப்பிறவி தான்வாய்க்க!

புல்பூண்டாய் எறும்பினமாய்ப் பூச்சிகளாய்ப் பறவைகளாய்ப்
பல்விலங்கி லொன்றாய்ப் பாம்பினத்தில் ஒன்றேயாய்
வல்லரக்க ரியக்கருமாய் வானமரர் கந்தருவர்
ஒல்லென்றே ஒலிபரவை உள்நீந்து முயிரினங்கள்
எல்லையிலா வாய்ப்பிதலே எவ்வுடலுஞ் சேராமல்
நல்லறிவாம் ஆறாலே நலமுணரும் மானுடராய்க்
கல்வியினால் மென்மேலும் கற்றுணரும் ஆற்றலுடன்
அல்லழித்தே உள்ளத்தில் அகலேற்றும் வாய்ப்புபெற

என்னதவம் செய்துவிட்டோம்? எவரேனும் சொல்லுங்கள்!

என்னதவம் செய்தோம்? இந்தியராய் நாம்பிறக்க!

விண்முட்டும் பெருமலைகள் விதவிதமாய் ஜீவநதி
கண்கட்டும் காவளங்கள் கழனியெலாம் பொன்விளைந்து
மண்முட்டும் எழிலியற்கை மறைவிளைத்த மாநிலமாம்
பண்பட்ட ஆன்றோர்கள் பலகோடிப் பேர்கண்டக்
கொண்டாட்ட தேயமிந்தக் குவலயத்தின் மணிவிளக்காம்
பெண்ணாள்நம் பாரதத்தாய் பீடுமடி நாம்தவழ்ந்தே
வண்ணமுற வையமெலாம் வாழ்த்துவணம் வாழ்ந்ததற்காய்த்
தெண்டனிட்டுத் தாய்புகழின் திறம்பேசும் நலமடைய

என்னதவம் செய்துவிட்டோம்எவரேனும் சொல்லுங்கள்!

என்னதவம் செய்தோம்? இன்றமிழ ராய்ப்பிறக்க!

பிறப்பென்றென் றறியாத பெற்றியினைப் பெற்றவளாம்!
சிறப்பெல்லா மொன்றாகச் சேர்த்திழைத்துச் செய்தவளாம்!
இறப்பில்லா மூத்தவளாம்எஞ்ஞான்றும் இளையவளாம்!
அறம்பொருளோ டின்பமுடன் அவ்வீடு மருள்பவளாம்!
பிறைசூடி பெற்றவளாம்பெருமாளுக் கினியவளாய்
மறைதன்னிற் செய்தவளாம்மங்காத புகழுடையாள்
குறத்திமண வாளன்நம் குமரனுக்கு கந்தவளாம்
திறத்திலுயர் தமிழாளைத் திறம்பாமல் பேசுதற்கே

என்னதவம் செய்துவிட்டோம்எவரேனும் சொல்லுங்கள்!

என்னதவம் செய்தோம்? இச்சோலை நாமிணைய!

வெற்றெனவே சொல்லடுக்கி வீதியெது தெரியாமல்
கற்றுத்த ருவதற்கும் கைபிடித்துச் செல்வதற்கும்
உற்றவரென் றாருமின்றி உளறலெலாம் கவிதையென
தட்டுத்த டுமாறியே தவழ்ந்திருந்த நம்மையெலாம்
தொட்டுத்தம் தோளேற்றித் தொடைஅசைசீர் பாவகைகள்
மட்டில்லா மகிழ்வுதரும் மணிச்சிந்து வகைகளெலாம்
சொட்டுச்சொட் டாய்ஏற்றி சூழுந்த மிழ்க்கடலில்
முற்றும்நமை யமிழ்த்தி முத்தெடுக்க வைத்ததற்கே!

என்னதவம் செய்துவிட்டோம்? எவரேனும் சொல்லுங்கள்!

இப்பிறப்பில் யான்செய்த இன்றவமென் றேதுமிலை!
முற்பிறப்பில் எலியொன்றும் முக்கண்ணன் அகல்திரியைத்
தற்செயலாய்த் தூண்டிவிட்ட தகைமையினால் அதுவேதான்
பிற்பிறப்பில் அரசனெனும் பீடுபெற்ற தெனுந்தொன்மம்!
எப்பிறப்பி லேயோநாம் ஏராளம் நற்றவங்கள்
தப்பின்றிச் செய்துள்ள தன்மையினால் இப்புவியில்
ஒப்பில்லா மானுடராய் இந்தியராய்த் தமிழருமாய்
இப்பிறப்பில் பைந்தமிழின் இன்சோலை சேர்ந்தனமே!

No comments:

Post a Comment